முறிந்த அம்புகள்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
இதிலுள்ள சிறுகதைகள் எனது சின்ன தவங்கள். ஒரு நாவல் எழுத்தாளனாக நான் முதலில் புலப்படத் தொடங்கிய போதிலும் சிறுகதைகளில் தான் என்னால் என் எழுத்தாள நோக்கை ஈடேற்ற முடிந்தது. முடிந்து கொண்டிருக்கிறது.
இலக்கிய உலகம் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அம்சம் சிறுகதை. வ.வே.சு. ஐயர் நாளிலிருந்து இன்று வரை ஆயிரமாயிரம் ஜனனம் கண்டுவிட்ட இந்த இலக்கியம் என் வரையில் எளிமையானது. வலிமையானதும் கூட!”
ஒரு எழுத்தாளனின் தாகத்தை உடனே தீர்க்க முடிந்த பானம் இது. அவனது மன ஓட்டங்களை உடனுக்குடன் இறக்கி வைக்க முடிந்த சுமை தாங்கியும் கூட.
ஒரு வாசகனை இந்த எளிய சாதனத்தால் விரைவாக கைப்பற்றி விடலாம். அவன் மனதுக்குள் நாம் முடிந்த எல்லை போய் வரலாம். திகைப்பு, நெகிழ்ச்சி, சிந்தனை’ என்று பல உணர்வுகளை மிக விரைவாய் மூட்டவும் செய்யலாம்.
இலக்கியப் பரிசோதனைக்கு ஏற்ற, மிக வளைந்து கொடுக்கும் சாதனமும் இதுவே என்பது என் கருத்து.
நடைக்காக மட்டும் ஒரு கதை எழுதிப் பார்த்து அடிபடாமல் தப்பலாம். கருத்தை மட்டும் சொல்லி மற்ற விஷயங்களை தவிர்த்து விட்டும் அந்த வடிவத்தை சிதைக்காமல் கையாளலாம்.
நவரச உணர்வுகளுக்கும் இடம் கொடுக்கவல்ல ஒரு சாதனம் இது. நகைச்சுவையாக நாலு பக்கம் எழுதத் தெரிந்தால் தானே நானூறு வரை போக முடியும்? அந்த நாலு பக்க முயற்சிக்கு இது மிகப் பயன்படுகிறது. இப்படி பரிசோதனைகளுக்குள்ளாவதால், எளிதில் கையாளக் கூடியதாக இருப்பதால், எவரும் முதலில் நுழையும் நுழை வாயிலாக அமைந்து விட்டதால், இதற்கு விபத்துக்களும் அதிகம்!
பல நேரங்களில் பத்திரிகைகளில் நான் சிறுகதை எனும் பெயரில் கட்டுரை வாசித்திருக்கிறேன்.
இன்னும் சில நேரங்களில் குற்றுயிராய் கிடக்கும் ஒரு ஆட்டுக்குட்டிபோல அது பல கோணங்களில் விபத்துக்குள்ளாகி உயிருக்கே துடிப்பதை கண்டிருக்கிறேன்.
இது தவிர்க்க முடியாத விஷயம் என்றாலும் தாங்கிக் கொள்ள முடியாத விஷயமும் அல்லவா?
என்றால் என் படைப்புகள் சிறுகதையின் சிகரங்களா? என்று கேட்கத் தோன்றும்.
நிச்சயமாக இல்லை… ஆனால் என் பரிசோதனையில் விபத்துக்குள்ளாகாத ஒரு விஷயம் அது. ஒரு வீர்யம் அது!
எனது வலிமிகுந்த ஆயுதம் சிறுகதைதான்.
என் இலக்கிய ஜனிப்பின் நோக்கம் எதுவோ அதில் மிகுதியும் பயன்படும் பலமான அம்சம் சிறுகதை.
நான் எழுத்தாளன் ஆனதே ஒரு சிறுகதையால் தான். ஒரு சிற்றிதழில் ‘இருளுக்கு இழுப்பவர்கள்.’- என்று ஒரு சிறுகதை. பா. ஜெயப்பிரகாசம் என்பவர் எழுதியது. என் அரை டிராயர் பருவத்தில் நான் (1977-78) உணர்ந்து வாசித்த முதல் கதை அது.
முதல் வாசிப்பிலேயே என்னுள் அது மூட்டிய ஆவேசம் சொல்ல முடியாத ஒன்று. வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை அது என்னை உசுப்பி விட்டது.
அடேயப்பா எழுத்துக்கு இத்தனை சக்தியா? கவர்ச்சியா? என்று கேள்வி கேட்க விட்டது. நானும் பேனா பிடிக்க ஆரம்பித்தேன்.
இந்த நிமிஷம் வரை அந்த ஜெயப்பிரகாசம் தான் என் எழுத்துலக குரு. அவரை நான் பார்த்தது கூட இல்லை, ஆனாலும் அந்த துரோணருக்கு இந்த ஏகலைவன் இந்த நூல் மூலம் என் நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன். எழுத்தால் எல்லாம் ஒன்றும் சாதிக்க முடியாது என்று கூறுபவர்களுக்கு ஒரு வார்த்தை. ஒரு சிறு கதையால் ஒரு எழுத்தாளன் உருவாகியிருக்கிறேன் என்பதே! அது சாதித்த விவரங்களை பட்டியலிட முடியாது. அது சூரிய ஒளி. குறிப்பிட்ட இடத்தில் இந்த பிரபஞ்சத்தில் அது சுடர் விடுவதாகவும் கூற முடியாது. மற்ற முயற்சிகளின் சாதனைகள் வேண்டுமானால் இருளில் ஏற்றிய தீபங்களாய் இனம் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கலாம்.
இது அப்படி அல்ல… இது சரியாகப் புரியாதவர்கள் எழுத்தை அதன் பலத்தை உப்பு புளி போல் உபயோகித்து சமைத்து உண்டு மலஜலம் போல கழித்து விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
இரண்டாயிரம் வருஷமாக வள்ளுவம் வாழ்ந்து கொண்டிருக்கிறதே… சாதிக்க முடியாத சக்கையாக அது இருந்தால் எப்படி வாழ முடியும்?
அப்படியே நல்ல சிறுகதைகளும் வாழும் என்று நம்புகிறேன். அது வாழும் விதமாக நாம் எழுத வேண்டும் என்பதும் மிக முக்கியம்.
இதற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மதிப்புரை கிட்டியதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுகிறேன்.
அந்தக் கறுப்பு வெல்ல மனிதரின் இனிப்புப் பேச்சைப் பற்றி. தெளிவான சிந்தனை பற்றி வாசக உலகம் நன்கு அறியும். இவர்களுக்கெல்லாம் என் நன்றி என்றும் உரியது. இந்தச் சிறு கதைகள் வெளியாகக் காரணமாக இருந்த வார இதழ்களுக்கும் என் நன்றி என்றும் உரியது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.